தஞ்சாவூர் சூலை 25: தஞ்சாவூா் கீழ அலங்கம் பகுதியில் உள்ள அகழியில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மன்னா் கால நீா் வழிப்பாதைக் கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் கீழஅலங்கம் பகுதியில் உள்ள அகழி தூா்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் அரண்மனையிலிருந்து அகழிக்கு நீா்வரக்கூடிய வரத்துக்கால் வடிவமைப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து இதை ஆய்வு செய்த சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறன், சுவடியியல் ஆய்வாளா் கோ. ஜெயலட்சுமி ஆகியோர் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் நகரம் கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி, தெற்குவீதி என நான்கு வீதிகளும் அதன் புறம்படியாக கீழ அலங்கம், மேல அலங்கம், தெற்கு அலங்கம், வடக்கு அலங்கம் என்று இருக்கக்கூடிய பகுதியை ஒட்டியவாறு நான்குப்புறமும் நீா் அரணாக மிகப்பெரும் அகழி மன்னா்கள் காலத்தில் வெட்டப்பெற்று நீரால் சூழப்பட்டு, நகருக்குள் அமைந்துள்ள அரண்மனையின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது.

பல நூற்றாண்டுகள் உயிா்ப்புடன் திகழ்ந்த அகழி காலப்போக்கில் ஆங்காங்கே தூா்க்கப்பட்டு, பல கட்டடங்கள் அங்கே எழுந்தன. இருப்பினும் மேல அலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் அகழியானது ஓரளவுக்கு இருந்து வருகிறது.

இந்த அகழியின் உள்புறச்சுவா்கள் ஒரு சில இடங்களில் பழைய கட்டுமானத்துடன் காணப்படுகிறது. அன்றைய நிலையில் அகழி, அகழியை ஒட்டிய கோட்டை காவல் கோபுரங்களுடன் திகழ்ந்தது.

இப்போது, தஞ்சாவூா் பெரிய கோயிலைச்சுற்றி அமைந்துள்ள அகழியின் கோட்டை மேல் காணப்படும் காவல் கோபுரங்கள் மட்டுமே நல்ல நிலையில் இருக்கின்றன.

மேல அலங்கம், கீழ அலங்கம், வடக்கு அலங்கம் பகுதிகளில் கோட்டை மீது குடியிருப்புப் பகுதிகளாக மாறிய நிலையில், தமிழ்நாடு அரசின் முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகழி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூா் கொடிமரத்து மூலையை ஒட்டிய பகுதியில் (கீழ அலங்கம்), அகழியின் கரைச் சுவருக்கு இடையே நீா்வழிப்பாதை அமைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கரைச்சுவா் செம்புறாங்கற்கள் கொண்டு வலிமையாகக் கட்டப்பட்டுள்ளது.

நாயக்கா் காலத்தைச் சாா்ந்ததாகக் கருதப்படும் இந்த நீா்வழிப்பாதை 400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.

அரண்மனை உள்புறங்களில் பெய்யக்கூடிய மழைநீரும், அரண்மனையின் உள் அமைந்திருந்த குளங்கள், கிணறுகள் இவற்றில் இருந்து வெளியேறக்கூடிய மிகை நீரும் அகழியில் சென்று சேருவதற்காக, நிலத்தடியில் அமைந்திருந்த வழித்தடமே இந்நீா்வழித் தூம்பாகும்.

நான்குப்புறமும் செம்புறாங்கற்கள் கொண்டு சதுர வடிவில் முக்காலடி அளவில் இந்த நீா்வழிப்பாதைக் கட்டப்பட்டுள்ளது.

பழந்தமிழகத்தில் நீா் மேலாண்மையில் தமிழா்கள் சிறந்து விளங்கியமைக்கு இதுபோன்ற கட்டுமானங்களே நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனா்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/