தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம் ) கும்பகோணம் சார்பில், 32ம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இருசக்கரவாகன ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை அலுவலகத்திலிருந்து பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம் ) லிட் . , கும்பகோணம் மேலாண் இயக்குநர் திரு. இரா. பொன்முடி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். பின்னர் அவர் கூறியதாவது:
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் “ சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது . இந்த ஆண்டு 32வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 18.1.2021 முதல் 17.22021 வரை ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ” என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனிமனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து , விபத்தினை தவிர்ப்பதாகும் . சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் , உறுப்பிழப்புகள் மற்றும் கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும் , பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன . எனவே , சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
எனவே இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசு உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் . , கும்பகோணம் சார்பில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய தொகுப்பாக 18.01.2021 முதல் 17.02.2021 வரை கும்பகோணம், நாகப்பட்டினம் , திருச்சி , கரூர் , புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி உள்ளிட்ட ஆறு மண்டலங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் , பொதுமக்கள் , பள்ளி , கல்லூரி மாணவர்கள் , போக்குவரத்து பணியாளர்கள்கள் மற்றும் சாலையை பயன்படுத்தும் அனைவரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பெறும் வகையில் பயிற்சி வகுப்புகள் , பேட்ச் அணிதல், ஸ்டிக்கர் ஒட்டுதல் , அச்சு பிரதிகள் வழங்குதல் ஒலி , மற்றும் ஒளி காட்சிகள் , கண்காட்சி பேருந்து பார்வையிடல் , சிறிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் இருசக்கர வாகன ஹெல்மெட் , நடை பேரணிகள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் தலைமை அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, இரயில் நிலையம் , அஞ்சல் நிலையம் ஆயிகுளம் வழியாக விழிப்புணர்விற்கான பேனர் ஏந்தியும் , ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நடந்தது. பணியாளர்கள் உள்ளே செல்லும் வழியில் விழிப்புணர்வு வளைவு வாயிலும் , தலைக்கவசம் “ தன்னை அணிந்து கொண்டால் பாதுகாப்பு தருவேன் என உருக்கமாக வேண்டுதல் விடுக்கும் ஒலிக்காட்சியும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
இப்பேரணியில்
அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் நவமணி ஜெபராஜ், சக்திவேல், துணை மேலாளர்கள் ஸ்ரீதர், கார்த்திகேயன், கணேசன், பணி மேலாளர் ராஜேஷ் மற்றும் லயன்ஸ், ரோட்டரி சங்கத்தினர் , போக்குவரத்து பணியாளர்கள் , அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் .
க.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை