தஞ்சாவூர், ஜன.6 தஞ்சையை சேர்ந்த 2 வயது குழந்தை அதிக ஞாபகத்திறன் கொண்டமைக்காக உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் பெயர் இடம் பெற்றுள்ளது. தஞ்சை கரந்தைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்குமார் – தீபிகா. இவர்களின் குழந்தை சாய்மித்ரன் வயது (2). இந்த குழந்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் மாதங்களின் பெயர்கள், நாட்கள், உலக அரசியல் தலைவர்களின் பெயர்கள், கணினியின் பாகங்கள், வாகனங்களின் பெயர்கள், சூரிய எரியாற்றல் பற்றிய தகவல்கள், உலக நாடுகளின் தேசியக் கொடிகள், பழங்களின் பெயர்கள் அவற்றின் நிறங்கள், காய்கறி வகைகள் ஆகியவற்றை களை மனப்பாடமாகவும், சரளமாகவும் எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் சொல்லி வருகிறார்.

மேலும் உலக தலைவர்களின் உருவப் படத்தை பார்த்து அவர்களின் பெயர்களையும், உலக நாடுகளின் தேசியக்கொடிகளின் நிறங்களை பார்த்து அது எந்த நாட்டு தேசியக் கொடி என்பது பற்றியும் பிழையில்லாமல் அனைவர் மத்தியிலும் கூறி வருகிறார். இரண்டு வயதே ஆன இந்த குழந்தைக்கு அதிகமான ஞாபகத்திறன் கொண்டமைக்கான விருதை வழங்கவும், உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் அந்த குழந்தையின் பெயரை இடம் பெறச் செய்யவதற்கான நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது.

சிவகங்கையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முனைவர் சந்தனசாமி தலைமை வகித்தார். உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நிமலன் நீலமேகம், தலைமைச் செயற்குழுவின் பொதுச்செயலாளர் ஆர்த்திகா நிமலன், தஞ்சை மாவட்ட பொதுச் செயலாளர் கவிஞர் குழந்தைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இணைச் செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை மாநகராட்சி சூப்பரண்ட் கிளமெண்ட் அந்தோணிராஜ், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை சாய் மித்தரனுக்கு விருதும், பாராட்டுச் சான்றும் வழங்கினார்கள். மேலும் சாய் மித்ரணின் அதிக ஞாபக திறன் கொண்டமைக்காக உலக சாதனையாளர்கள் புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர் பிரணவ் குமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் பிரபாகர், மாணவர் ராகவ் அய்யனார், பொருளாளர் டெய்சி ஜூலியட் ராணி, மாணவர் பிரிவு செயலாளர் சஞ்சய் மற்றும் தமிழ் சான்றோர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் நிஷா நன்றி கூறினார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/