தஞ்சை மே 04: தஞ்சையிலிருந்து நெல்லைக்கு சரக்கு ரெயிலில் 1,250 டன் புழுங்கல் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் அறுவடை முடிந்து கோடைநெல், முன்பட்ட குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு பிள்ளையார்பட்டி, புனல்குளம், பருத்தியப்பர்கோவில், அம்மன்பேட்டை, வீரமரசன்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நெல் மூட்டைகள் அரவைக்காக பிற மாவட்டங்களுக்கு ரெயில் மூலமாகவும், லாரிகள் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரவை மில்களுக்கும் நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு, அரிசியாக மாற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அரிசி மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு பொதுவினியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு வினியோகம் செய்ய அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்த புழுங்கல்அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் இந்த அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் ஏற்றினர். மொத்தம் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல்அரிசி நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்