தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று நடந்த சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதன்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் நடந்து வருகிறது. இதில் கடந்த 13 மற்றும் 17ம் தேதிகளில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2305 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது.

இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, இறந்தவர் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர் பெயர் நீக்கம், வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் என விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்தவகையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடந்தது.

தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, திருக்கானூர் தூயமரியன்னை பள்ளி, வல்லம் பேரூராட்சி தூய சவேரியார் நடுநிலைப்பள்ளி போன்ற இடங்களில் நடந்த வாக்காளர் சேர்க்கை முகாமை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், இடம்பெயர்ந்த, இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குதல், திருத்தம், வண்ண புகைப்படம் இடம் பெற செய்திடவும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். நாளையும் (21ம் தேதி) இந்த முகாம் நடக்கிறது.

இதேபோல் வரும் 27 28-ம் தேதிகளில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/