தஞ்சாவூர்: காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட உள்ளது. இதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் பாலங்களில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பினை அடுத்து காவிரி டெல்டா மாவட்டத்தில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வயல்களில் உழவு செய்து, ஆழ் குழாய் தண்ணீர் வசதியுள்ள இடங்களில் நாற்றங்கால் தயார்படுத்தும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயத்தில் கால்வாய் பாசன விவசாயிகள் விதை நெல் வாங்கி வைப்பதற்கும் ஆவல் காட்டத் தொடங்கியுள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு நேற்றைய நிலவரப்படி 97 அடியாக உள்ளது தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடையும் பொழுது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

வருகிற 12-ம் தேதி திறக்கப்பட உள்ள மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கல்லணையை 16ஆம் தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது மேட்டூர் அணையை திறக்க உள்ளதை முன்னிட்டு கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கொள்ளிடம் ஆற்றின் பகுதிகளில் புது வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்