சென்னை ஜூன் 4: முதலமைச்சர் உத்தரவு… மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ஆம் நாள் முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவது குறித்து நீர்வளத் துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர், வேளாண் துறைச் செயலாளர் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசனை நடத்தினார்.

அணையின் தற்போதைய நீர் மட்டம், டெல்டா பாசன விவசாயிகளின் தேவை ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டன. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 61 புள்ளி நான்கு மூன்று டி.எம்.சி. ஆகவும் உள்ளது.

இதனாலும் தென்மேற்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிக்கும் முழுமையாகச் சென்று சேரும் வகையில் டெல்டா மாவட்டங்களில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 647 பணிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டு விவசாயப் பணிகளுக்குத் தேவையான விதை நெல், உரங்கள், இதர வேளாண் இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் வைக்கவும் வேளாண் துறை மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்