தஞ்சை சூன் 07 கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு கடந்த 10.05.2021 முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில்தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வழங்கிய கடன் தவணை தொகையை திரும்ப செலுத்த கேட்டு வலியுறுத்தி வருவதாக பல்வேறு இடங்களிலிருந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.

கொரோனோ ஊரடங்கு நடைமுறையில் உள்ள காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கருதி, அனைத்து தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் நிறுவனங்கள் கடன் தவணை தொகையினை நிர்பந்தம் செய்து வசூல் செய்யும் கடின போக்கினை தவிர்த்திட வேண்டும்.

மேற்படி தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவனங்கள் தற்போது தவணைத்தொகை செலுத்த கட்டாயப்படுத்தாமல் கால அவகாசம் அளித்திடவும், அந்த நிலுவைத் தொகைகளுக்கு கூடுதல் வட்டி வகுலிப்பதை தவிர்த்திடவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இது தொடர்பாக மாவட்ட அளவில் மாாட்ட முன்னோடி வங்கி மேலாளர், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் திரும்ப செலுத்தும் கால அட்டவணையை மாற்றி அமைத்திடவும் (Re-schedule) நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்று காரணத்தால் தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதி நிறுவன பணியாளர்கள் வெளியூர் நபர்களாக இருப்பதாலும், கடன் தொகை வசூல் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதால் இவர்கள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

ஆகையால் இது தொடர்பாக எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் எதேனும் இம்மாவட்டத்தில் எழும் பட்சத்தில் இச்செயல் தற்போது அரசு விதித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறியச் செயலாக கருதப்பட்டு, தொடர்புடைய அனைத்து தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி கடன் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிருபர் தஞ்சை டுடே