தஞ்சாவூர் டிச 21: வரும் 29ம் தேதி இரவு தஞ்சைக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலினை தி.மு.க.வினர் எழுச்சியோடு வரவேற்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் ப்ளக்ஸ் போர்டு வைக்க கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். நகர செயலாளரும், எம்எல்ஏவுமான நீலமேகம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், நகராட்சி முன்னாள் தலைவர் இறைவன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் வரவேற்றார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவது:

தஞ்சையில் வரும் 30-ந்தேதி நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் 29-ந்தேதி இரவு தஞ்சை வருகிறார். அவருக்கு தி.மு.க.வினர், சார்பு அணி நிர்வாகிகள் வழிநெடுக எழுச்சியோடு வரவேற்பு அளிக்க வேண்டும். வழிநெடுகிலும் தி.மு.க. கொடிகள் கட்ட வேண்டும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் பிளக்ஸ் வைக்க கூடாது.

சேலம், கோவை மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சியை மிஞ்சும் வகையில் தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சி இடம்பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் தி.மு.க. வெற்றி பெற பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, ரவிச்சந்திரன், முன்னாள் எம்.பி. பரசுராமன், முன்னாள் எம்.எல்.ஏ. மகேஷ் கிருஷ்ணசாமி, மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் அண்ணா நன்றி கூறினார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/