தஞ்சை மார்ச்.17 தஞ்சை அரசு பொதுக் காப்பீட்டுத் துறை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் வளர்ச்சி அதிகாரிகள் புதன்கிழமை அகில இந்திய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

பொது இன்சூரன்ஸ் துறை நிறுவனங்களில் ஒன்றை தனியார் மயமாக்கும் முடிவைக் கண்டித்தும், காப்பீட்டு துறையில் அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 3 வருடமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வேண்டும் என வலியுறுத்தியும்

தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை டெல்டா பகுதியில் 200 க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.  வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் மூடிக் கிடந்தன.  தஞ்சை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நாடிமுத்து (GIEAIA) தலைமையில்  ஏ.ஐ.இ.இ.ஏ மாவட்டச் செயலாளர் டி.பிரபு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அதிகாரிகள் ஜெயஸ்ரீ, தியாகராஜன், பென்சனர்கள் சார்பில் ஜெயக்குமார், முகவர் இளையராஜா, தஞ்சைக் கோட்ட எல்.ஐ.சி. ஊழியர் சங்க தலைவர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் பி. சத்தியநாதன் நிறைவுரையாற்றினார். சரண்ராஜ் நன்றி கூறினார்.