தஞ்சாவூர்: தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. இதனால் பூச்சி மருந்து தெளிக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். ஆனால் தட்டுப்பாடின்றி பூச்சி மருந்துகள் கிடைக்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றின் 2-ம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மேலும் தமிழகத்திலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால், உணவு, மருந்தகங்கள், மருத்துவமனைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கால் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ளனர். இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாபநாசம் திருவிடை மருதூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, வடபாதிமங்கலம், நன்னிலம், பேரளம், பூந்தோட்டம், கொல்லுமாங்குடி மற்றும் நாகை மாவட்டம். மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பாண்டில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதல் அதிகம் நிலவி வருகிறது. இதனால் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிக்க வேண்டியது அவசியம். ஆனால் பூச்சி மருந்து கடைகள் பெரும்பாலும் பூட்டியே உள்ளன. அரசின் அறிவுறுத்தலின்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை திறக்கப்படுகிறது. இதனால் பருத்தியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பூச்சி மருந்து அடிக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு பருத்தி சாகுபடி குறைந்துள்ளது. தற்போது பருத்தி செடிகளில் பூக்கள் பூத்து காய்கள் வைக்க தொடங்கியுள்ளன. சில பகுதிகளில் பருத்தி அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் பருத்தி செடிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் சப்பாத்தி பூச்சி தாக்குதல் தற்போது அதிகரித்துள்ளது.

தமிழக அரசு சார்பில் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு ஊரடங்கு காலகட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தாலும், பருத்தி செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பூச்சி மருந்துகள் வாங்க தனியார் கடைகளை நாட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான பூச்சி மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் அவைகளும் காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தடையின்றி அனைத்து பூச்சி மருந்துகளும், இடுபொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்