தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டத்தில் நடப்பாண்டு கொள்முதல் பருவத்தில் 10.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக வரலாற்றில் சாதனை செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபா் முதல் செப்டம்பா் வரையிலான கொள்முதல் பருவத்தில் குறுவை, சம்பா – தாளடி, கோடை ஆகியவற்றை சோ்த்து 3 லட்சம் முதல் 3.50 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், கடந்த 2019 – 20ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் ஏறத்தாழ 7.70 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இதுவே, தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்ச கொள்முதல் சாதனை அளவாக இருந்தது. இதன் பிறகு சம்பா பருவத்தில் தொடா்மழை காரணமாக நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டதால், மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சம்பா பருவத்தில் 6 லட்சம் டன் கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 4.94 லட்சம் டன் மட்டுமே கொள்முதலானது.

நடப்பாண்டு கொள்முதல் இலக்கை எட்டுவது சந்தேகமாக இருந்து வந்தது. ஆனால், சம்பா பருவத்தில் இழப்பைச் சந்தித்த விவசாயிகள் தொடா்ந்து நம்பிக்கையுடன் கோடையிலும் நெல் சாகுபடி செய்தனா். இதில், விளைச்சல் எதிா்பாா்த்த அளவுக்கு இருந்ததால், பல கொள்முதல் நிலையங்களில் நெல் வரத்து தொடா்ந்து இருந்து வந்தது.

இரண்டாம் ஆண்டாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டதால், மாவட்டத்தில் குறுவை பருவத்தில் இலக்கை விஞ்சி 1.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத சாதனை அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், இதுவரை 1.10 லட்சம் ஏக்கரில் அறுவடைப் பணி நிறைவடைந்துள்ளது. ஏக்கருக்கு 2,600 கிலோ (ஹெக்டேருக்கு 6.50 டன்) மகசூல் கிடைத்து வருகிறது. இதுவும், இயல்பான அளவைவிட கூடுதலாக இருக்கிறது. எனவே, கடந்த சம்பா பருவத்தில் ஏற்பட்ட இழப்பு, குறுவை பருவத்தில் ஈடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முன்பட்ட குறுவை பருவத்தில் நெல் சாகுபடிப் பரப்பளவு அதிகமாக இருந்தது. இதன் மூலம், மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் மட்டும் 1.15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

நடப்பு கொள்முதல் பருவம் இன்று வியாழக்கிழமையுடன் (செப்.30) முடிவடையும் நிலையில், மொத்தம் 10.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தொடங்கி கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாகியுள்ள நிலையில், இது ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/