தஞ்சாவூர், அக். 20: தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் தஞ்சை நாகை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் வரை மட்டும்தான் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் முகமது ஷாகிர்ஹான் (எம் Z ஹான்) தலைமையிலான குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேற்று திடீரென ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர்.

முன்னதாக இக்குழுவினர் தஞ்சை அருகே அரசூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது கொள்முதல் நிலையங்களில் நிலையத்தில் விவசாயிகள் கொட்டி வைத்திருக்கும் நெல் மணிகளை கையால் அள்ளி எடுத்து ஈரப்பதத்தின் தன்மை குறித்து பரிசோதித்தனர்.

அப்போது கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக நெல்லை கொண்டுவந்துள்ள விவசாயி மதிவாணனிடம், நீங்கள் எப்போது நெல்லை இங்கு கொண்டு வந்தீர்கள். நெல்லை இங்கு கொட்டி காயவைக்கும் போது அப்போது மழை பெய்ததா? அப்போது உங்களுடைய நெல்லின் ஈரப்பதம் எவ்வளவு இருந்தது என்று அக்குழுவினர் கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

பின்னர் அங்கு உள்ள ஈரப்பதமானி கருவி மூலம் நெல்லைக் கொட்டி பரிசோதித்தனர். அதன் பின்னர் துணை இயக்குனர் முகமது ஷாகிர்ஹான் (எம் Z ஹான்) நிருபர்களிடம் கூறியதாவது:
நெல்லின் ஈரப்பத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுச் செய்து வருகிறோம். இந்த ஆய்வறிக்கையை இன்னும் 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என்றார். ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இணை இயக்குனர் (நிர்வாகம்) சங்கீதா, முதுநிலை மண்டல மேலாளர் (தஞ்சை) உமா மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

‍‍க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/