பேராவூரணி: தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக் கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் சுப்பிரமணியன் (73). பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அம்மாக்கண்ணு (60). விவசாயக் கூலி.
இவா்களது மகன் பழனிவேல் ஒலி- ஒளி அமைப்பாளராக வேலை செய்து வந்தார். அவரது மனைவி கோமதி. இவா்களுக்கு சக்திவேல் (16) என்ற மகனும், சங்கவி (11) என்ற மகளும் உள்ளனா். இந்நிலையில், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோமதி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த சோகம் மறைவதற்குள்ளாகவே , மஞ்சள் காமாலை நோயால் பழனிவேலுவும் இறந்துவிட்டார்.

இதையடுத்து பிள்ளைகள் இருவரும் ஆதரவற்ற நிலையில் தாத்தா-பாட்டி பராமரிப்பில் இருந்து வருகின்றனா். இவா்களது நிலை குறித்து மாவட்ட ஆட்சியா் கோவிந்தராவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட பேராவூரணிக்கு சென்ற அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் மேற்கண்ட தகவல்களை ஆட்சியா் தெரிவித்தார்.

உடனடியாக சக்திவேல், சங்கவியை வரவழைத்து ஆறுதல் கூறிய அமைச்சா், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் ரூ. 40 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி, அவா்களுக்கு தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் தெரிவித்தார்.

நிவாரண உதவியைப் பெற்றுக் கொண்ட குழந்தைகள், சுப்பிரமணியன் ஆகியோர் அமைச்சா், ஆட்சியருக்கு நன்றி கூறினா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்