தஞ்சாவூர் செப் 23: தஞ்சை சரோஜ் நினைவகத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தஞ்சை மாவட்ட குழு அழைப்பின் பேரில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மகளிர், இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள பங்கேற்ற கூட்டம் நடந்தது.

இதில் ஒன்றிய அரசு கொண்டுவந்த விவசாயிகள் விரோத 3 வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கடந்த 10 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது வரை 600க்கும் அதிகமான விவசாயிகள் போராட்டக் களத்தில் இறந்துள்ளனர்.

ஆனால் அரசு கோரிக்கைகளை பரிசீலனை செய்வதற்கு பதிலாக போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது. மேலும் மின் திருத்த மசோதா, சுற்றுச்சூழல் மசோதா, தொழிலாளர்கள் விரோத சட்ட தொகுப்பு, மீன்வள மசோதா, பெட்ரோல் டீசல் விலை உயர்வு என அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகிறது.

மேலும் அரசை விமர்சிப்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவது, சிறையில் அடைப்பது போன்ற செயல்களையும் மேற்கொண்டு வருகிறது. இந்த கோரிக்கைகளை உள்ளடக்கி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சி.பி.அய் எம் ஆகியவற்றின் அழைப்பை ஏற்று வரும் 27ஆம் நாள் பாரத் பந்த் நடைபெற உள்ளது.

இந்தப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பங்கேற்பது, கடை அடைப்பு, ரயில், பஸ் மறியல், ஒன்றிய அரசின் போக்கை எதிர்த்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/