தஞ்சை அக். 12- தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு 30 மணிநேரத்தில் கண்டுபிடித்து மீட்ட போலீசாரை டிஐஜி பர்வேஷ்குமார் பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் குணசேகரன் (24 ). இவரது மனைவி ராஜலட்சுமி (22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு தஞ்சை ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தங்களின் குழந்தையை காணவில்லை என்று கடந்த 8ம் தேதி குணசேகரன் மேற்கு போலீசில் புகார் செய்தார்.

அதனைத் தொடர்ந்து எஸ்.பி., ரவளிபிரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., கபிலன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பகுப்பாய்வு செய்ததில் சந்தேகப்படும்படி ஒரு பெண் துணிபையுடன் சென்று ஆட்டோவில் ஏறிச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் மருந்துகடையில் டயபர் வாங்கியதில் தள்ளுபடி கூப்பன் வழங்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தொலைபேசி எண்களை பகுப்பாய்வு செய்து விசாரணை செய்ததில் பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜி (37) என்பவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரிடமிருந்து கடத்தப்பட்ட குழந்தை பாதுகாப்பாக கைப்பற்றப்பட்டது.

மேலும் குற்றவாளி விஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். கடத்தப்பட்ட குழந்தையை மீட்ட தனிப்படையினரை தஞ்சைசரக டிஐஜி., பர்வேஷ்குமார், நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கி சிறப்பித்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/