தஞ்சாவூர் அக்: 1 -பெண்களை தரக்குறைவாக நடத்தும், முறைக்கும் பேருந்து நடத்துனர்களையும், ஓட்டுனர்களையும் அடியுங்கள் என்று திமுக பொதுச் செயலாளரும் தமிழக அமைச்சருமான துரைமுருகனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தஞ்சாவூரில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நகரப் பேருந்துகளை இயக்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக தஞ்சையில் சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நகரப் பேருந்துகள் இயங்கவில்லை. தஞ்சை ஜெபமாலைபுறம் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து எப்போதும்போல காலை 4 மணிக்கு முதல் பேருந்து வெளியேறியது அதைத் தொடர்ந்து ஒரு சில பேருந்துகள் வெளியேறிய நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீரென காலை 5 மணி முதல் பேருந்துகளை இயக்க மறுத்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுனர் நடத்துனர்கள் என்றால் கேவலமானவர்களா, இளிச்சவாயர்களா எனக்கேட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக ஆவேசமாக பேசினர். எங்களை பணியிட மாற்றம் செய்தாலும் பரவாயில்லை பேருந்துகளை இயக்க மாட்டோம் என கூறினர் இப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போராட்டத்தில் தொமுச, ஏஐடியுசி, சிஐடியு முச் ஆகிய போக்குவரத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பங்கேற்றனர் இதுபற்றி தகவலறிந்த போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செந்தில்குமார் தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சமாதானப்படுத்தினர் இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர் சுமார் 3 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 8 மணி முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயங்கின.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/